தனேந்திரன், அன்பழகன் கைது விளக்கம் பெற்றபின் விடுதலை...
>> Friday, January 4, 2008
(நா.மணிராஜா)
பட்டர்வொர்த், ஜன. 4-
இந்து உரிமை நடவடிக்கைக் குழுவின் (ஹிண்ட்ராப்) ஒருங்கிணைப் பாளர் ஆர்.எஸ்.தனேந்திரன் அவரின் உதவியாளர் எம்.அன்பழகன் ஆகிய இருவரை நேற்றுமுன்தினம் போலீசார் கைது செய்தனர். தங்களை கைது செய்த போலீசார் எந்த ஒரு வாக்குமூலத்தையும் பதிவு செய்யாமல், 4 மணி நேரம் கழித்து விடுவித்ததாக தனேந்திரன் கூறினார்.
எந்த ஒரு காரணமும் இல்லாமல் தங்களை கைது செய்தது தன்னையும் தமது குடும்பத்தாரையும் அவமானப்படுத்தியதாக கருதுவதால் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து தன் வழக்கறிஞருடன் கலந்தாலோசித்து வருவதாக நேற்று இங்கு அவர் கூறினார்.
நேற்று முன்தினம் மாலை 6.45 மணியளவில் போலீஸ்காரர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு என்னிடம் வாக்குமூலம் பதிவு செய்ய வேண்டுமென்று தன்னையும் தமது உதவியாளர் அன்பழகனையும் காரில் அழைத்துச் சென்றனர்.
போகும் வழியில் பட்டர்வொர்த் போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்வதாக கூறிய போலீசார், பிறகு பிறை போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றதாக அவர் சொன்னார்.
பிறை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றவர்கள் தமது அடையாள கார்ட்டை வாங்கி குறிப்பு எடுத்துக் கொண்டனர். இரவு 11. மணி வரை எந்த வாக்குமூலமும் போலீசார் பதிவு செய்யவில்லை அப்போது ஏஎஸ்பி அஸ்மிர் என்பவர் என்னிடம் பேச வேண்டும் என்றும் தம்முடன் வரும்படி ஓர் அறைக்கு அழைத்துச் சென்றார். அன்பழகனும் உடன் வந்தார்.
அப்போது அந்த அதிகாரி பிறை கம்போங் மானிஸ் கலவரத்தில் ஹிண்ட்ராப்பிற்கு சம்பந்தம் உண்டா என்று தம்மிடம் கேட்டதாக தனேந்திரன் கூறினார். ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் எந்த ஒரு வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் அல்ல. இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் ஹிண்ட்ராப் ஆதரவாளர்கள் என்று தாம், அவரிடம் கூறியதாக தனேந்திரன் சொன்னார். நான் ஹிண்ட்ராப்பின் ஆதரவாளன். இசா சட்டத்தில் கைது செய்யப்பட்ட 5 தலைவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று ஆலயங்களில் கூட்டு பிரார்த்தனை செய்து வருகிறோம் என்று நான் கூறினேன்.
ஆலயங்களில் பிரார்த்தனையில் ஈடுபடும்போது இளைஞர்களுக்கு நல்ல கருத்துகளை எடுத்துக் கூறி வருவதாக கூறினேன். இதற்கு மக்களிடையே நல்ல ஆதரவு ஏற்பட்டுள்ளதோடு, மக்கள் வியப்படைந்துள்ளனர் என்றும் அந்த போலீஸ் அதிகாரியிடம் தெரிவித்தேன்.
இதற்கு அந்த போலீஸ் அதிகாரி, ஆலயங்களில் பிரார்த்தனை செய்வதில் எந்த தவறும் கிடையாது என்று கூறினார்.
செய்தி : மலேசிய நண்பன்
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment