அழிவை நோக்கிப் பினாங்குத் தீவு.. உடனடி தீர்வு தேவை..
>> Wednesday, January 30, 2008
மலேசியாவின் வட மாநிலமான பினாங்கு மாநிலம், அதிலும் முக்கியமாக பினாங்குத் தீவு மலேசியாவின் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். அழகிய கடற்கரை, வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், பலவிதமான உணவு வகைகள் என பல சிறப்புகளை பினாங்குத் தீவு தன்னகத்தே தக்கவைத்துள்ளது. 19-ஆம் நூற்றாண்டில் இந்தியர்களை சஞ்சிக் கூலிகளாக கொண்டு வரப்பட்டு முதன் முதலில் அவர்கள் இறக்கி விடபட்ட இடம் பினாங்குத் தீவு என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இத்தகு பெருமைகளைக் கொண்ட இத்தீவு, நாளுக்கு நாள் தன்னுடைய கற்பை இழந்து வருகிறது எனக் கூறினால் அதை மறுப்பதற்கில்லை. இன்று பார்க்கும் இடங்களிலெல்லாம் வானளாவிய கட்டிடங்கள், வாகன நெரிசல்கள், ஜனத் தொகை பெருக்கம், சுற்றுச்சூழல் மாசு என பல வளர்ச்சிகளையும், வீழ்ச்சிகளையும் ஒருங்கே பெற்றுக் கொண்டு இந்த குட்டித் தீவு அவதிப்படுகிறது. கடந்த ஆண்டில் மக்கட்தொகை கணக்கெடுப்பில் பினாங்கின் மக்கள் தொகை 1.6 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.
இத்தொகை மேலும் பெருகுமாயின் பினாங்குத் தீவு வரலாறு காணத நெரிசலை வருங்காலத்தில் எதிர்நோக்க வேண்டியுள்ளது. சுற்றுலாத்தலம் எனப் பெயர்பெற்ற இக்குட்டித்தீவு இன்று மிகப் பெரிய தொழிற்பேட்டைகள், அனைத்துலக விமான நிலையம், வர்த்தகக் கட்டிடங்கள் என ஹாங் காங்கைப் போல் ஒரு வர்த்தகத் தீவாக மாற்றம் கண்டுவிட்டது. குறுகிய காலக்கட்டத்தில் அதீத மாற்றம் கண்டுவிட்ட இக்குட்டித்தீவு தற்போது தன்னுடைய இயற்கை வளங்களை மெல்ல மெல்ல இழந்து வருகிறது. வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் அரசாங்கம் மேம்பாட்டாளர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, தன்னுடைய இயற்கை வளத்தை தாரை வார்த்துக் கொடுப்பதால் இன்று பினாங்கில் உள்ள பாதுகாக்கப்பட வேண்டிய காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன.
நிம்மதியை நாடி பலர் சுற்றுலாத் தலங்களின் மீது படையெடுக்கும் பொழுது பினாங்குத் தீவு அவர்களை வாகன நெரிசலோடு வரவேற்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இன்று பினாங்கின் அழகிய கடற்கரைகள் குப்பைக் கூளங்களையும் நுரைகளையும் கக்கிக் கொண்டிருக்கின்றன.. இவை அனைத்தும் பினாங்கு இன்று அடைந்துள்ள மேம்பாடும், மக்கட் தொகைப் பெருக்கமுமே ஆகும்..
மெல்ல மடியும் பினாங்கின் இயற்கை அழகிற்கு உச்சாணிக் கொம்பாக இக்குட்டித் தீவிற்கு சற்றும் ஒவ்வாத ஒரு மிகப் பிரமாண்டமான திட்டம் ஒன்று அண்மையில் அரசாங்கத்தின் ஒப்புதல் பெற்றுள்ளது நம்மையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பினாங்கிற்கு சுமையாக வந்திருக்கும் அத்திட்டத்தின் பெயர் பினாங்கு அனைத்துலக மாநகர் மையம் ஆகும்.
இகூவின் கெப்பிட்டல் மற்றும் அதன் துணை நிறுவனமான அபாட் நலூரி சென்டிரியான் பெர்காட் இம்மாபெரும் திட்டத்தை ஏற்று நடத்தவுள்ளன. இத்திட்டமானது பினாங்கின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்கோட்லண்ட் சாலை பினாங்கு குதிரை பந்தயத் திடலில் அமையவுள்ளது. இத்திட்டம் பதினைந்து ஆண்டுகளில் பூர்த்தியாகும் என்றும் இதனை பூர்த்திச் செய்ய 25 பில்லியன் செலவாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்த மேலும் சில தகவல்கள் :
50,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவிருக்கும் இம்மாபெரும் திட்டத்தில்,
1)384.953 ச.மீ பரப்பளவில் பேரங்காடி
2)95.174 ச.மீ பரப்பளவில் அனைத்துலக கருத்தரங்க மையம்
3)73.950 ச.மீ பரப்பளவில் பினாங்கு கலையரங்கம்
4)61.718 ச.மீ பரப்பளவில் 33 ஆடம்பர அடுக்குமாடிகள்
5)23.130 ச.மீ பரப்பளவில் 5 நட்சத்திர தங்கும் விடுதி
6)25.725 ச.மீ பரப்பளவில் 5 நட்சத்திர தங்கும் விடுதி
7)22.530 ச.மீ பரப்பளவில் அலுவலகங்கள்
8)183,390 ச.மீ பரப்பளவில் கார் நிறுத்துமிடம்
பினாங்கு குதிரைப் பந்தயத் திடல், திறந்த வெளிக்குரிய இடமாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட இடம் நாளடைவில் பலதரப்பட்ட வளர்ச்சித் திட்டங்களுக்குரிய இடமாக எப்படி மாற்றி அறிவிக்கப்பட்டது என புரியாத புதிராக உள்ளது. அதே வேளையில் இத்திட்டங்கள் முறையான பரிசீலனைக்குள்ளாகி அரசாங்கத்தின் ஒப்புதல் பெறுவதற்கு முன்பே எப்படி இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது என்பது இன்னொரு புரியாத புதிர்.
இத்திட்டத்திற்கு பினாங்கு மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியவுடன் அவசர அவசரமாக இத்திட்டத்திற்கு சான்றிதழ் வழங்கியவர் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி என்பது குறிப்பிடத்தக்கது.
இத்திட்டத்தில் இன்னொரு கோளாறு என்னவென்றால், எந்த ஒரு குடியிருப்புத் திட்டமென்றாலும், அத்திட்டத்தில் 30 சதவிகிதம் மலிவு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட வேண்டும். இத்திட்டத்தில் மொத்தம் 6,933 ஆடம்பர அடுக்குமாடி வீடுகள் உள்ளனவே தவிர மலிவு விலை வீடுகளுக்கு அங்கு இடம் ஒதுக்கப்படவில்லை. இருப்பினும், இம்மலிவு விலை வீடுகள் வேறிடத்தில் கட்டப்படுமாம். ஏழையையும் பணக்காரனையும் பிரித்து வைக்கின்ற செயல் அல்லவா இது... ஏன், இரு பிரிவினரும் ஒரே இடத்தில் சேர்ந்து வாழ்ந்தால் அங்கு வசிக்கும் பணக்கார துவான்களுக்கு சகித்துக் கொள்ள முடியாதோ? அரசாங்கம் இப்படி கௌரவம் பார்ப்பது கேவலமாக இருக்கிறது.
இது மட்டுமல்லாமல், இத்திட்டதில் இரு உயர் கட்டிடங்கள் பேர் சொல்லும் அளவிற்கு பினாங்கு மாநிலத்தின் சின்னங்களாக விளங்குமாம். அக்கட்டிடத்தில் ஒரு கட்டிடம் 66 மாடிகளைக் கொண்டது எனத் தெரிய வந்துள்ளது.
ஏழைகளுக்கென்று எந்த ஒரு திட்டமும் கொண்டு வர இந்த அரசாங்கத்திற்கு வக்கில்லை, ஆனால் பணக்காரர்கள் நன்றாக வாழ்க்கை தரத்தை அனுபவிக்க வேண்டும் என இத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதை நாம் அறியலாம். தற்போது பினாங்கு மக்களின் கேள்வி என்னவென்றால், ஸ்கோட்லண்ட் சாலை ஏற்கனவே ஒரு நாளைக்கு 60,000 வாகனங்கள் பயன்படுத்தும் சாலையாக இருக்கும் பொழுது, வரப்போகின்ற இம்மாபெரும் திட்டம் பினாங்கின் மையப் பகுதியை நெரிசலுக்கு உள்ளாக்கி விடாதா எனபதுதான்... இதில், நெரிசலைக் குறைக்க பினாங்கிற்கு இரண்டாவது பாலமாம்.. ஒரு குட்டித் தீவிற்கு இவ்வளவு மக்கள் பணத்தைச் செலவு செய்து, அத்தீவை அழிவிற்குள்ளாக்கும் செயலை அரசாங்கத்தின் மடத்தனம் என்றே சொல்லவேண்டும். அதிலும், சீன நாட்டின் ஒரு வங்கியில் கடனை வாங்கி இந்த இரண்டாவ்து பாலம் கட்டப்படுகிறது. இறுதியில் கடனை அடைப்பதற்கு மக்கள் பணம்தான் சுரண்டப்படும்..
இயற்கை வளங்களையும் அழித்து, மக்களின் உள்ளுணர்வையும் அவர்களின் தேவைகளையும் புறக்கணித்து மேம்பாட்டாளர்களின் லாபத்திற்கும் அரசாங்கத்தின் சுய லாபத்திற்கும் நிலங்களை விற்று இப்படி மாபெரும் திட்டங்களை உருவாக்கினால், நாளடைவில் அங்குள்ள மக்கள்தான் அவதிக்குள்ளாக வேண்டிவரும்... பினாங்கு மக்களே, உங்களின் எதிர்காலத்தை சோதனைக்காலமாக மாற்ற வரும் இத்திட்டத்தை புறக்கணியுங்கள்..! இனியும் நெரிசல்களின் இடிபாடுகளில் உங்கள் வாழ்க்கையின் சக்கரம் ஓடக் கூடாது...!
வளர்ச்சி என்பது கட்டிடங்கள் உயர்வதாலும், உல்லாசக் கேளிக்கைகள் பெருகுவதாலும் அல்ல..
நல்ல நற்பண்புகள் உள்ள, அலைச்சல் மன உளைச்சல் இல்லாத, நிம்மதியான, இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை என்பதே ஒரு நாட்டின் குடிமகனுக்கும், அந்நாட்டிற்கும் ஏற்பட்டிருக்கும் உண்மையான வளர்ச்சி என்பதை அறிக...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment