விடுதலை கிடைக்கும் - இந்து உரிமைப் பணிப்படை தலைவர்கள் நம்பிக்கை
>> Tuesday, January 22, 2008
மலேசிய நண்பன் செய்தி
தைப்பிங், ஜன.22-
இந்து உரிமைப் பணிப்படை தலைவர்கள் உண்ணா விரதத்தை கடைப்பிடித்தால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் மீட்டுக் கொள்ளப்படும் என்று தைப்பிங் சிறைச்சாலை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக நேற்று காலை 11.30 மணிக்கு வழக்கறிஞர்கள் எம்.குலசேகரன் மற்றும் ஏ.சிவநேசனும் தடுப்புக் காவலில் உள்ள பி.உதயகுமார், வி.கணபதிராவ்,
எம்.மனோகரன், ஆர்.கெங்காதரன் மற்றும் டி.வசந்தகுமார் ஆகியோரை சென்று கண்ட பின்
நிருபர்களிடம் விவரித்தனர்.
கடந்த சனிக்கிழமை தொடக்கம் அவர்கள் வெவ்வேறு அறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தொலைக்காட்சி பார்ப்பது, புத்தகங்கள், நாளிதழ் படிப்பது மற்றும் குடும்பத்தார் அவர்களை சென்று காண்பதும் நிறுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை ஜசெக உதவித் தலைவருமான எம்.குலசேகரன் குறிப்பிட்டார். வாரம் ஒருமுறை குடும்பத்தார் அவர்களை காண அனுமதிக்கப்பட்டு வருகிறது.
பி.உதயகுமார் மற்றும் டி.வசந்தகுமார் ஆகியோருக்கு சிறிது உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் உண்ணா விரதத்தை தொடங்கி விட்டனர். டாக்டர்கள் பரிசோதனைக்குப் பின் தொடர்ந்து அவர்கள் உண்ணாவிரதம் இருப்பதை முடிவு செய்யப்படும் என்று ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.குலசேகரன் கூறினார்.
நாடு முழுவதும் தொடர்ந்து அமைதி பிரார்த்தனை நடந்து வருகிறது. மேலும் பல ஆலயங்களில் உண்ணாவிரதத்தை கடைபிடிக்க தொடங்கியுள்ளனர். நேற்று முன்தினம் ஈப்போ கல்லுமலை ஆலயத்தில் 50 பேரும் கிள்ளானில் 25 பேரும் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினர். இன்று பீடோங்கில் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.
இம்மாதம் 24,25 மற்றும் 28ஆம் தேதிகளில் அவர்களுக்கு எதிரான விசாரணை தொடங்கும். ஐவரையும் நிபந்தனை இன்றி விடுவிக்க கோருகின்றனர். இந்த விசாரணைக்குப் பின் அவர்கள் விடுவிக்கப்படுவர் என்று பெரிதும் எதிர்பார்ப்பதாக ஐவரும் கூறியதாக எம்.குலசேகரன் கூறினார்.
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment