வருகின்ற பொதுத்தேர்தலில் ஊழல் நடக்க வாய்ப்புகள் அதிகம் - துன் மகாதீர் கருத்து..
>> Tuesday, January 29, 2008
மலேசியாவின் நடப்பு அரசாங்கம் மக்களின் தேவைகளை அறிந்துக் கொள்வதில் மெத்தனப் போக்கை கடைப்பிடித்ததன் பயனாக இன்று அரசாங்கம் பலவீனமடைந்து வருவதாக துன் டாக்டர் மகாதீர் இன்று கூறினார்.
மேலும் அண்மைய காலங்களில் நடத்தப்பட்ட சில கருத்துக்கணிப்புகளின் வழி இன்றைய நடைமுறை அரசாங்கம் தன்னுடைய செல்வாக்கை மக்கள் மத்தியில் நிலையுற வைப்பதில் தவறிவிட்டதாக அவர் கூறினார்.
இந்த தாக்கத்தினால் வருகின்ற பொதுத் தேர்தல்களில் ஓட்டுகளை வாங்குவதில், லஞ்சம் மிக எளிதாக ஊடுருவ வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என அவர் கூறினார். இது தமக்கு மிகுந்த பயத்தையும் அளிப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளைப் பற்றி கருத்துரைக்கையில், அண்மையில் தலைநகரில் இந்தியர்கள் ஒன்று திரண்ட நிகழ்வானது, சிறுபான்மை மக்கள் நடப்பு அரசாங்கத்தின் மீது வைத்துள்ள அவநம்பிக்கையை பறைச்சாற்றுகிறது என அவர் கூறினார். மேலும் இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர்களின் கைது விவகாரம் அரசாங்கம் எடுத்த ஒரு தவறான முடிவு என்றும் கடந்தக் காலங்களில் அரசாங்கம் கடைபிடித்து வந்துள்ள மெத்தனப்போக்கும், களையாமல் விட்ட சிறு சிறு தவறுகளுமே அன்று இந்தியர்களின் போராட்டமாக வெடித்தது எனவும் கூறினார்.
சிறுபான்மையினர் தங்களின் குறைகளை அரசாங்கத்திற்கு எடுத்துக் கூற முறையான ஊடகம் அமையாது போனதே, அரசாங்கம் இன்று வலுவிழந்து காணப்படுவதற்குக் முக்கியக் காரணம் என்றும் அரசாங்கம் அதனை நிவர்த்தி செய்வதில் எந்த ஒரு நன்மை பயக்கும் முடிவையும் கொண்டு வரவில்லை என அவர் கூறினார்.
இருப்பினும், அம்னோ அரசாங்கம் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் 20 அல்லது 30 கட்சியின் வேட்பாளர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தோல்வியை எதிர் நோக்கினாலும் தேசிய முன்னணிக் கட்சி வெற்றிப் பெறும் என அவர் கூறினார். இருப்பினும் கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னனிக்குக் கிடைத்த ஓட்டுகளின் எண்ணிக்கை இம்முறை பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார்.
தேசிய முன்னணிக்கு மக்களின் ஆதரவு உள்ளதா என பொதுத் தேர்தல்தான் முடிவு செய்யும் என்றாலும், வாக்காளர்களை பணம் கொடுத்து வாங்கும் வேலை நடைப்பெறுவது தமக்கு மிகுந்த பயத்தை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதன்வழி நாட்டு குடிமக்களின் உண்மையான ஆதரவு யாருக்கென்று புலப்படாத ஒரு நிலைமை உருவாகலாம் என அவர் அச்சம் தெரிவித்தார்..
இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர்களைக் குறித்து அவர் கருத்துரைக்கையில், அவர்களின் போராட்டம் நியாயமாக இருந்தாலும் இந்திய சமுதாயம் இந்நாட்டில் ஒடுக்கப்படுகின்றனர் எனும் கருத்தை அவர் மறுப்பதாகவும், அவர்களை இ.சா சட்டத்தில் கைது செய்வதைக் காட்டிலும் அவர்களிடம் அரசாங்கம் முறையாக கருத்துக்களைக் கேட்டிருந்தால் இவ்வளவு பிரச்சனை வந்திருக்காது எனக் கூறினார்.
இந்திய சமுதாயம் ஒடுக்கப்படவில்லை எனவும், தேசிய முன்னனியின் சார்பில் இந்திய மக்களின் பிரதிநிதியாக விளங்கும் ம.இ.கா இந்தியர்களின் கோரிக்கைகளுக்கு சரியாக செவிசாய்க்காமல் போனதே இன்று இந்திய சமுதாயம் தேசிய முன்னனியின் மீது நம்பிக்கையற்று போனதற்கு ஒரு காரணம் என அவர் கூறினார்.
ஒரே கட்சி மக்களைப் பிரதிநிதிப்பதாலும் மற்றக் கட்சிகளுக்கு அவர்கள் வாய்ப்புகள் கொடுக்காமல் போனதும் பெரும்பான்மையான இந்தியர்களுக்கு மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது என அவர் கூறினார்.
"போராட்டம் வெடிப்பதற்கு ஒரு காரணம் கண்டிப்பாக உள்ளது, அரசாங்கம் தொடந்து பல தப்புக்களை புரிந்து வருவதை மக்கள் காண்கிறார்கள். நாளடைவில் அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகளால் அது தன் பலத்தை இழந்து நிற்கும் வேளையில் மக்கள் வெகுண்டு எழுகிறார்கள். அரசாங்கத்திற்கு தங்களுடைய ஆதங்கங்களை புலப்படுத்துகிறார்கள்" என்று துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார்.
முன்னால் துணைப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தொடர்பாக அவர் கருத்துரைக்கையில், " அன்வார் இப்ராகிமிற்கு அரசியல் எதிர்காலம் என்றொன்று இல்லை, அது அஸ்தமனமாகிவிட்டது. அப்படி அவர் மீண்டும் இந்நாட்டின் பிரதமராக வர முடியும் என்றெண்ணினால் அது பகல் கனவு காண்பதற்கு ஒப்பாகும்.." என அவர் கூறினார்.
செய்தியை ஆங்கிலத்தில் மின்னஞ்சலில் அனுப்பியவர் : வர்த்தகர், குமார் : பாசீர் கூடாங் (நன்றி)
அப்படியென்றால் மகாதீர் ஆட்சிக் காலத்தில் தேர்தலில் ஊழல் எனும் வார்த்தைக்கு அவர்கள் அகராதியில் பொருளில்லாமல் இருந்ததோ?
ம.இ.கா பிற கட்சிகளுக்கு சேவை செய்ய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்றால் உங்கள் ஆட்சிக்காலத்தில் சாமிவேலுவை தட்டிக் கேட்டிருந்தால் இந்திய சமுதாயம் சந்தோஷப்பட்டிருக்கும்.. சம்பந்தியானவரை தட்டிக் கேட்க மனமில்லாமல் மௌனம் சாதித்ததை நீங்கள் மறந்திருக்கலாம்..ஆனால், நாங்கள் இன்னும் மறக்கவில்லை..
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment