மொழியின் புதல்வா, எங்களைவிட்டுப் பிரிந்துவிட்டாயே...!!! :(
>> Sunday, January 20, 2008
தமிழ் வலைப்பதிவுலகில், சமுதாய முன்னேற்றக் கருத்துக்களைத் தாங்கி வரும் மொழி நெட்டின் பதிவர், என் நண்பர், பழ வீரரின் புதல்வருமான திரு.பூங்குன்றன் நேற்று இறைவனடி சேர்ந்தார். 25 வயதே ஆன பூங்குன்றன் சமுதாய விழிப்புணர்வு மிக்கவராக திகழ்ந்து வந்தார். இவர் தமிழ் மொழிக்கும் தமிழ் சமுதாயத்திற்கும் சேவைச் செய்வதற்கு பல கனவுகளையும் திட்டங்களையும் தாங்கி வந்தவர். இவர் போன்ற ஒரு நண்பர் கிடைத்திருக்க மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டேன், ஆனால் மிக விரைவில் தமிழுலகம் இவரை இழந்து விட்டது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.
பூங்குன்றன் தமிழ் நெறிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு தமிழ் அமைப்புகளிலும், மக்கள் ஓசை, நண்பன், செம்பருத்தி போன்ற இதழ்களின் நிருபராகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். விபத்தொன்றில் பாதிக்கப்பட்ட அவர், செராஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்ததாக குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். அவரின் நல்லுடல் கிரிக், பேராக்கில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ஆம் திகதியன்றுதான் பூங்குன்றனின் தந்தையும் மலேசியத் தமிழ் நெறிக் கழக பொதுச் செயலாளருமான பழ.வீரன் சாலை விபத்தில் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் இழப்பு மலேசியத் தமிழ் வலைபதிவர்களிடையே ஏற்பட்ட மாபெறும் இடி என்றுதான் கூறவேண்டும்.
இனி, இவர்போல் ஒரு தமிழ் பற்றுள்ள நண்பனை எப்பொழுது பெறுவேனோ..?
பூங்குன்றன் அவர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் அனுப்பிய மின்மடல்களை இங்கு உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.. அவரின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக அவர் கூறியவை என்னை மிகவும் வியக்க வைத்தன.. அவரின் மொழித் திறனைக் கண்டு பலமுறை அவரிடம் பாடம் கற்றுக் கொண்டேன்.. இவர் தொடங்கவிருந்த பழவீரர் தவச்சாலை எனும் அகப்பக்கம் முற்றுப் பெறாமலேயே போனது... :( மொழியின் அகப்பக்கத்தில் அவர் இறுதியாக ஓலைச்சுவடியின் இணைய இணைப்பைக் கொடுத்திருப்பது என் நெஞ்சை மேலும் விம்மச் செய்கிறது.. :(
"நண்பா உன் கனவுகள் நிச்சயம் ஒரு நாள் நிறைவேறும்.. தமிழர்களாகிய நாங்கள் நிறைவேற்றி வைப்போம். உன் எதிர்கால திட்டங்கள், கனவுகள் இப்பொழுது எங்கள் மனங்களில் குடி கொண்டு விட்டன.. நீ திட்டமிட்டப் பணிகளை நாங்கள் தொடர்ந்து தமிழ் நல்லுலகிற்கு எடுத்துச் செய்வோம்... நண்பா.. நீ அமைதியாக உறங்கு...."
இறைவன் உன் ஆத்மாவைச் சாந்தி பெறச் செய்வாராக... :(
நண்பன் பூங்குன்றன் அனுப்பிய சில மின்மடல்கள்...
மின்மடல் 1
வணக்கம். தங்களின் ஓலைச்சுவடியைப் பார்த்தேன். பெருமகிழ்ச்சி அடைந்தேன். நல் முயற்சி.
தொடர வாழ்த்துகள்.
இந்நாட்டில் நமக்கெதிராக அம்னோ அரசாங்கத்தின் மறைமுக ஒடுக்குதலை நாம் ஒன்றுப்பட்டு எதிர்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
ஒற்றுமை அதுவே வெற்றியை நோக்கி நம்மை வழி நடத்தும்.
விரைவில் 24 மணி நேர தமிழ்ச் செய்திகள் தளம் ஒன்றினை உருவாக்க எண்ணியுள்ளேன்.
வாரம் ஒரு முறை இணைய வானொலி, இணைய தொலைக்காட்சி தொடங்கும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளேன்.
விரைவில் தொடங்கப்படும்.
தங்களை போன்ற இணைய ஆர்வலர்கள் துணை நிற்க வேண்டும்.
மொழி
--
மொழி ஆய்வரண் - மலேசியா
Mozhi Research & Development Centre,
Kuala Lumpur, Malaysia
http://www.mozhi.net/
மின்மடல் 2
அன்பு ஐயா,
ஓலைச்சுவடியின் முழு வாசகர்களின் ஒருவராகவே பேசுகிறேன்.
நல்ல முயற்சி.
மலேசியத் தமிழர்களாலும் இணையத் தளத்தில் தொடர்ச்சியாக காலூண்ற முடியும் என காட்டி வருகிறீர்கள்.
24 மணி நேர செய்திச் சேவை தை முதல் நாள்(ஜனவரி 15) கொண்டு வர நினைக்கிறேன்.
முடியுமா என தெரியவில்லை.
பல அழுத்தங்களோடு பணிச்சுமைகளோடு மொழியின் பணிகள் இருக்கின்றன.
நிறுவனமயமாக்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
இன்னும் ஒழுங்கமைக்க வேண்டிய தேவைகள் உண்டு.
கடந்த ஆண்டில் எமது அப்பாவின் இழப்பு அதிகம் பாதித்துவிட்டது.
இந்த ஆண்டு தொடக்கம் இன்னும் உழைக்க வேண்டும்.
ஓலைச்சுவடியை நண்பர்களிடம் அறிமுகம் செய்கிறேன்.
தொடரட்டும் உங்கள் தமிழ்ப்பணி.
தமிழோடு உயர்வோம் ஒன்றுபட்டு வெல்வோம்.
அன்பே சிவம்.
தமிழ்ச்சுவடிகளின் தோழன்
குன்றன்
நண்பன் பூங்குன்றன் தொடர்பாக மேலும் தகவல்கள்...
வீ. பூங்குன்றன் மலேசியாவில் வாழ்கிற தமிழ் ஊடகவியலாளர்களில் குறிப்பிடத்தக்கவர். ஒரு வரைகலையாளரான இவர் மலேசியாவில் வெளிவருகிற முன்னணி நாளேடான மலேசிய நண்பனிலும் மக்கள் ஓசையிலும் சில காலம் பணியாற்றியவர். மலேசியாவின் முன்னணி சிற்றிதழ்களில் இவர் கட்டுரைகள் அதிகம் எழுதி வந்தவர்.
தமிழியக்கம்
கடந்தாண்டு (2006) மலேசியத் தமிழ் மாணவர்கள் அரசு பல்கலைக்கழகங்களில் நுழைய வழிகாட்டுதல் இல்லாமல் பெரு அவதிக்குள்ளாகி இருந்த நிலையில், மாணவர்கள் வழிகாட்ட தமிழியக்கம். கொம் (www.tamiliyakkam.com) என்ற இணையத் தளம் ஒரே இரவில் உருவாக்கப்பட்டது. அதே காலக்கட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் துணையுடன் தமிழியக்கம் எனும் இளைஞர் இயக்கம் அமைக்கப்பட்டது. தமிழியக்கத்தின் தலைவராக வழக்கறிஞர் மு.ப. குணாளன் செயல்படுகிறார். தமிழியக்கத்தின் நிறுவனர்களில் பூங்குன்றனும் குறிப்பிடத்தக்கவர்.
குடும்பம்
இவரின் தந்தை திரு. பழவீரர் தமிழ்த்தேசிய உணர்வாளர். மலேசியாவின் வட மாநிலங்களில் இவர் தமிழ்ப்பணி ஆற்றி வந்தவர். அரச நீதிமன்ற மொழிப் பெயர்ப்பாளராக திரு. பழ.வீரர் பணியாற்றினார். ஐயா பழ.நெடுமாறன் தொடங்கிய உலகத் தமிழர் பேரமைப்பின் மலேசிய நிகராளியாக பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.. தாய் நா. லீலாவதி குடும்பத் தலைவி. இரு தம்பிகளும் நான்கு தங்கைகளும் இவர் உடன் பிறந்தவர்கள்.
தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
இவ்விரண்டு திருவள்ளுவரின் வாக்குகளுக்கு முற்றிலும் பொருத்தமுடைய மொழியின் புதல்வன் என்றென்றும் தமிழர்களின் நெஞ்சில் பாதுகாக்கப்படுவார்...
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment