கமுந்திங் தடுப்பு முகாமில் உயிர் பிரியும் வரையில் உண்ணாவிரதம் இருப்போம்...
>> Thursday, January 10, 2008
உயிர் பிரியும் வரையில் உண்ணாவிரதம் இருப்போம் என்று தடுத்து வைக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் பி.உதயகுமார், மனோகரன் மலையாளம், பி.கணபதிராவ், ஆர். கங்காதரன் மற்றும் இந்து உரிமைப் பணிப்படையின் செயலாளர் பி.வசந்தகுமார் ஆகியோர் தெரிவித்ததாக வழக்கறிஞர் எம்.குலசேகரன் கூறினார்.
நேற்று முற்பகல் 11.00 மணி அளவில் தைப்பிங் கமுந்திங் தடுப்பு முகாமிற்கு வழக்கறிஞர்கள் எம்.குலசேகரனும் ஆர்.சிவநேசனும் சென்று அந்த ஐவரையும் சந்தித்தனர். வரும் ஜனவரி 20ஆம் திகதி தொடங்கி 25ஆம் திகதி வரை நாள்தோறும் காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அவர்கள் தங்களிடம் தெரிவித்தனர் என்றார் குலசேகரன்.
தேவை ஏற்பட்டால் ஜனவரி 28ஆம் திகதி வரை உண்ணாவிரதத்தை நீட்டிப்போம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
வரும் ஜனவரி 14ஆம் திகதி காலை 10.00 மணி அளவில் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் அந்த முகாமிற்குச் சென்று ஐவரிடமும் விசாரணை நடத்துவார்கள். அதே வேளையில், அந்த ஐவர் சார்பிலும் கர்பால் சிங், குலசேகரன், ஆர்.சிவநேசன், கோபிந்த் சிங், கே.ஏ.இராமு ஆகியோர் முன்னிலை வகிப்பார்கள்.
தற்போது திரு.உதயகுமாரின் மீது 9 குற்றச்சாட்டுகளும் மற்றவர்கள் மீது 7 குற்றச்சாட்டுகளும் பதிவாகி உள்ளதாக குலசேகரன் தெரிவித்தார். தங்களின் போராட்டத்தில் அவர்கள் எந்த எதிர்கட்சியிடமும் சேர்ந்து கொண்டு போராட்டம் நடத்தவில்லை. அரசாங்கத்திற்கு எதிரான இயக்கத்திலோ அவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.
இந்தியர்கள் இந்த நாட்டில் இரண்டாம் தரப்பு குடிமக்களாக நடத்தக் கூடாது என்பதே தங்களின் கோரிக்கை என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும், அண்மையில் இந்தியா சென்ற டத்தோ சிறீ சாமிவேலு, அங்கு தொலைக்காட்சி செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது இந்து உரிமைப் பணிப்படை தலைவர்கள் யாரும் தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருக்கின்றனர் என்பதற்கு ஆதாரம் இல்லை என்று கூறியதையும் குலசேகரன் சுட்டிக் காட்டினார்.
செய்தி : மக்கள் ஓசை
*இவர்களுடன் சேர்ந்து நாமும் விரதம் மேற்கொண்டு ஆதரவைத் தெரிவிப்போமாக...
போராட்டம் தொடரும்...
0 கருத்து ஓலை(கள்):
Post a Comment