தைப்பொங்கல்

>> Sunday, January 13, 2008


தைப்பொங்கல் தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை போன்ற தமிழர்கள் வாழும் நாடுகளில் தை முதல் நாள் கொண்டாடப்படுகின்றது. பொங்கல் விழா, தமிழர்களின் தனிப்பெரும் விழா. எத்தனையோ விழாக்களை தமிழர்கள் கொண்டாடினாலும் வேறெந்த விழாவுக்கும் கொண்டாட்டத்துக்கும் இல்லாத சிறப்பு பொங்கலுக்கு மட்டும் உண்டு. மற்ற விழாக்கள் போலன்றி, பொங்கல் எல்லா சமயத்தினருக்கும் பொதுவானதாகவும், சமயம் கடந்ததாகவும் உள்ளது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.



பொங்கல் பண்டிகை நான்கு நாள் பண்டிகையாகும். மார்கழி கடைசி நாளன்று போகி கொண்டாடப்படுகிறது. அந்நாளில், பழையன கழித்து பதியன புகுதல் வழக்கம். தை மாத முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் மாட்டுப்பொங்கலும் (பட்டிப் பொங்கல்), காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.



பொங்கல் விழா, மக்களால் இயல்பாகக் கொண்டாடப்படுகிறது. உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கை சக்திகளுக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழா. உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல் ஆகும்.

பொங்கல் வைக்கும் முறை
பொங்கல் நாளன்று புத்தாடை அணிந்து, புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர். புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி கதிரவனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர். இந்துத் தமிழர்கள் சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று "பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!" என்று உரக்கக் கூவி அரிசியை இருகைகளாலும் அள்ளிப் பானையில் இடுவர். தனது முதற் பயனை கதிரவனுக்குப் படைத்துப் பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.


பிற மாநிலங்களில் பொங்கல்

இந்தியாவின் வட மாநிலங்களில் இது மகர சங்கராந்தி எனவும் சங்கராந்தி எனவும் கொண்டாடப்படுகிறது. சூரியன் தனுர் இராசியில் இருந்து மகர இராசியில் நுழைவதன் மூலம் உத்தராயணத்தில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் துவங்குகிறது. எனவே தான் இதை மகர சங்கராந்தி என அழைக்கின்றனர்.



இந்த வருடம் பொங்கல் ஜனவரி திங்கள் 15-ஆம் திகதி பிறக்கவுள்ளது. இவ்வளவு நாட்கள் நாம் மனதில் தேக்கி வைத்திருந்த அழுக்குகளை போகியன்று வெளியே தூக்கி எறிந்துவிட்டு புது மனிதனாக தமிழ் புத்தாண்டு அன்று காட்சியளிப்போம்.. மனமாற்றமும், புத்துணர்ச்சியையும்விட மிகப் பெரிய வரப்பிரசாதம் வேறொன்றுமில்லை.. எனவே தைப் பொங்கலானது நமக்கெல்லாம் வாய்த்த ஒரு வரப்பிரசாதம்..

பொங்கல் தொடர்பான படக்காட்சி



வெண் பொங்கல் செய்யும் முறையை விளக்கும் படக்காட்சி



என்னதான் இருந்தாலும், மட்பானையில் பொங்கி வரும் அந்த பொங்கலைச் சுவைக்கும்பொழுது அதில் கிடைக்கும் ஓர் ஆத்மார்த்த சுவை வேறெங்கிலும் கிடைக்காது... அம்மாவின் கைப்பக்குவத்தை பொங்கலன்று தவற விடாதீர்கள்...

பொங்கலன்று செய்யக்கூடிய சில பதார்த்தங்களின் செய்முறைகள் உங்கள் பதிவிறக்கத்திற்கு. இங்கே சுட்டுங்கள் : பொங்கல் பதார்த்தங்கள்

இந்த சந்தோஷமான வேளையில், ஓலைச்சுவடி வாசகர்களுக்கும் உலகளாவிய தமிழர்களுக்கும், விவசாயிகளுக்கும் பொங்கல் மற்றும் 2039ஆம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

2 கருத்து ஓலை(கள்):

Anonymous January 13, 2008 at 7:42 PM  

ungalukkum, ungal kudubathinar madrum nanbargal anaivarukkum emathu iniya ponggal nall vazthukal. whn you comin to ipoh... i have send my phone number to ur frenster acc... gv me a call if bk to ipoh...

puvanan January 16, 2008 at 12:24 AM  

I am more than happy see this blog written in beautiful tamil. Keep up the good effort and wish you a happy ponggal! Ponggum manggalam enggum tangguge!

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP