16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் நான்கு)

>> Friday, February 22, 2008

டூத்தா சாலைக் கட்டணச் சாவடியைக் வெற்றிகரமாக கடந்துவிட்ட பூரிப்பு சில மணித்துளிகளே எனக்கு நீடித்தது.. டூத்தா சாலைக் கட்டணச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவில், சாலை இரு பிரிவாகச் செல்லும். ஒன்று கூச்சிங் சாலை, மற்றொன்று மாநகர் செல்லும் சாலை. பயணத் தொடக்கத்திலிருந்து நிதானமாகவே காணப்பட்ட பேருந்து ஓட்டுநர், பேருந்தை கூச்சிங் சாலையில் அதே நிதானத்தோடு செலுத்தினார். ஓட்டுநர் அருகே நின்றுக்கொண்டிருந்த ஒருவர் யாரோ ஒருவரிடம் கைப்பேசியின் மூலம் நாடாளுமன்றம் செல்லும் வழியைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

" சொல்லுங்க சார்.. ஆம்.. ஓகே..ஓகே.. ஜாலான் கூச்சீங்கா சார்? ஓகே, ஜாலான் கூச்சிங் எடுத்தாச்சி... இப்ப ஜாலான் கூச்சிங்ல பூந்துட்டோம்.. ஓகே, நேரா போவா? ஓகே ஓகே சார்.. சைன் போர்ட் பாக்கணுமா? ஓகே, செலாயாங், சுங்கை பூலோ, கெப்போங்னு போட்டுருக்கு.. ஆம், ஓகே ஓகே, நேராதானே..ஓகே ஓகே.."

ஓட்டுநரைப் பார்த்து,

" அண்ணே, நீங்க நேரா போங்க... அங்கதான் பார்லிமெண்ட் இருக்காம்.."

இதையெல்லாம் பக்கத்திலிருந்துக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு ஒரே குழப்பமாக இருந்தது.. கோலாலம்பூர் பாதைகள் எனக்கு அத்துப்படி என்பதால், தவறு நடந்துவிட்டது தெரிந்தது, இருப்பினும் அமைதியாக அமர்ந்திருந்தேன்.. அடிக்கடி ஜன்னல் வழியே எட்டி எட்டி பார்த்துக் கொண்டே வந்தேன். ஒருவேளை ஓட்டுநர் குறுக்குப்பாதை ஏதாவது கண்டுபிடித்திருப்பார் என்று நினைத்துக் கொண்டு மனதைத் தேற்றிக் கொண்டேன். இருப்பினும், இந்நேரம் நிகழ்வு ஆரம்பமாயிருக்கும், பல நிகழ்வுகளைப் பார்க்க முடியாமல் போய்விடுமே என மனதிற்குள் ஒரு ஆதங்கம் இருந்துக்கொண்டே இருந்தது.

பேருந்து கெப்போங்கை அடைந்துவிட்டது. சரி கேட்டுப் பார்க்கலாம் என்று என் பக்கத்தில் அமர்ந்திருந்த வேலனிடம் கேட்டேன்.

"அண்ணே, பஸ் எங்கணே போது?"

"அதான்யா, எனக்கும் தெரியல"

பேருந்து முன் நின்றுக் கொண்டிருந்த அதே இளைஞர் மீண்டும் கைப்பேசியில்,

" இன்னும் நேராவாண்ணே, ஓகே..ஆம்..ஓகே, தோ பாசார் போரோங் கெப்போங்னு போட்டுருக்கு.. முன்னுக்கு வளைஞ்சிருனுமா..? ஓகே.."

பிறகு அவர் ஓட்டுநருக்கு, தனக்கே அறிமுகம் இல்லாதப் பாதையை 'இங்கே வளைங்க, அங்க நில்லுங்க' என்று கட்டளைப் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்பொழுதுதான் பேருந்து ஓட்டுநர் வழித் தெரியாமல் எங்கேயோ பேருந்தை ஓட்டிக் கொண்டுச் செல்கிறார் என்று தெரிந்தது..

உடனே நான்,

"அண்ணே, நீங்க போற ரூட் சாலா.., நீங்க திரும்பி யூ டர்ன் எடுக்கணும்.."

பக்கத்தில் அமர்ந்திருந்த வேலன்,

"உங்களுக்குப் பாத தெரியுமா?"

"ஆம்.தெரியும்"

பேருந்தினுள் படிக்கட்டுகளில் நின்றுக்கொண்டிருந்த இளைஞர் பேருந்தில் உள்ளவர்களிடம் ,

"யாருக்காச்சும் கே.எல் பாதை தெரியுமா?"

யாரும் பதில் கூறவில்லை.. உடனே வேலன்,

"தோ பாருலா, இவருக்குப் பாத தெரியுன்றாரு"

அந்த இளைஞர் என்னைப் பார்த்து,

"உங்களுக்குத் தெரியுமா?"

"தெரியும்"

வாங்க, வந்து பாத காட்டுங்க"

"சரிண்ணே, நீங்க மொதல்ல யூ டர்ன் எடுங்க"

பேருந்து கெப்போங் சந்தையைத் தாண்டியதும், ஒரு வளைவு எடுத்து மீண்டும் மாநகர்ச் செல்லும் சாலையில் பேருந்து பயணமானது. மாநகர் நோக்கி பேருந்துச் சென்றுக் கொண்டிருக்கும் வேளை, சற்றுத் தொலைவில் வாகனங்கள் நெரிசலில் அணிவகுத்து நிற்பது கண்ணிற்குத் தென்பட்டது. நெரிசல்ப் பகுதியை அடைந்ததும் ஒரு ஐந்து நிமிடம் நெரிசலில் ஐக்கியமாகி பேருந்து ஆமை வேகத்தில் நகர்ந்துக் கொண்டிருந்தது. எதற்கும் அனைவரும் விழிப்பு நிலையில் இருந்தோம். பேருந்து அடி மேல் அடி வைத்து நகர வாகன நெரிசலின் முக்கியக் காரணம் மெல்ல மெல்ல எங்கள் கண்களுக்குப் புலப்படத் தொடங்கியது.

மீண்டும் ஒரு அறிவிப்பு வந்தது...

" முன்னுக்கு புளோக் போட்டுருக்கானுங்க... கேட்டா எல்லாரும் கோட்டு மலைப் பிள்ளையார் கோயிலுக்கு போறோன்னு சொல்லிருங்க..ஓகே வா?"

சாலைத் தடுப்பை நெருங்க நெருங்க நாங்கள் அனைவரும் ஓட்டுநரைப் பார்த்து,

"அண்ணே, சோத்துக் கை சைட்டு போங்க, அவனுங்க பீச்சக் கை சைட்டு புளோக் போட்டுருக்காணுங்க.."

பேருந்து மெதுவாக சாலையின் வலதுபுறத்திற்கு இடம் பெயர்ந்தது...



சாலைத் தடுப்பை நெருங்க நெருங்க சாலைத் தடுப்பின் முழு உறுவம் ஒருகணம் எங்களை பயமுறுத்தியது.. சாலை முழுவதுமாக அடைக்கப்பட்டு ஒவ்வொரு வாகனமாக சோதனை செய்யப்பட்டு மாநகரினுள் அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. இம்முறை எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை, காரணம் அப்படியொரு பலத்தப் பாதுகாப்பு..

பயணம் தொடரும்...

அத்தியாயம் நான்கு முற்றும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP