16-ஆம் திகதியில் நான் பெற்ற அனுபவம்.. (அத்தியாயம் ஆறு)

>> Monday, February 25, 2008

சற்று நேரம் மண்டபத்தின் வெளியே நின்றுக் கொண்டிருந்தோம். பிறகு அம்மண்டபத்தின் உள்ளிருந்து ஒரு காவல்துறை அதிகாரி (தமிழர்) வெளியே வந்தார். வெளிவந்ததும் எங்களைப் பார்த்து,

"சரிங்க.. இப்ப வந்து ஒரு ஒரு ஆளா பேர கூப்டுவேன், அவங்க வந்து முன்னுக்கு நில்லுங்க..சரியா..."

கையில் எங்கள் அடையாள அட்டைகளை வைத்துக் கொண்டு ஒவ்வொரு பெயராக வாசித்தார். முதலில் 10 பேர்களின் பெயர் வாசிக்கப்பட்டு அவர்கள் மண்டபத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். என் பெயர் அழைக்கப்படவில்லை, எனவே வெளியிலிருந்து உள்ளே என்ன நடக்கிறது எனக் கண்காணித்தேன். வரிசையாக பத்து மேசைகள் அடுக்கப்பட்டு ஒவ்வொரு மேசையிலும் ஒரு காவல்துறை அதிகாரி நாற்காலி போட்டு அமர்ந்திருந்தார். உள்ளேச் சென்றவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மேசையின் எதிர்ப்புறம் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்துக் கொள்ளப் பணிக்கப்பட்டார்கள். பின் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் பேசுவது விளங்காததனால் என் பார்வையை அங்கிருந்து அகற்றி மறுபுறம் மக்கள் சக்தி கூட்டத்தினிடம் பரவ விட்டேன். அங்கு அனைவரும் ஒரு நீண்ட கூடாரத்தினுள் அமர்ந்துக் கொண்டு பார்வையை எங்கள் பக்கம் செலுத்திக் கொண்டிருந்தார்கள்.



சற்று நேரத்தில் மீண்டும் அதே காவல்துறை அதிகாரி அடுத்த பத்து பேர்களை வாசித்து அவரவர்களுடைய அடையாள அட்டையைக் கொடுத்தார். எனக்கும் கிடைத்தது. அதன் பின் அனைவரையும் மண்டபத்தினுள் அழைத்துச் சென்ற அவர் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் எங்களை அமரச் சொன்னார். நான் ஒரு காவல் துறை அதிகாரி முன் அமர்ந்தேன். என் அடையாள அட்டையை அந்த அதிகாரியிடம் நீட்டினேன். அவர் ஒரு வெள்ளைத் தாளில் என் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை எழுதிக் கொண்டிருந்தார்.



சுற்றி முற்றிப் பார்த்தேன். அனைத்து அதிகாரிகளின் முகங்களிலும் புன்னைகை இருந்தது. எங்களை தடுத்து வைத்த சந்தோஷக் கலையோ என்னவோ, ஆனால் அனைவரும் மரியாதையாக கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். சற்று நெரம் கழித்து என் முன்னே அமர்ந்திருந்த அதிகாரி கேள்விக் கணைகளைத் தொடுத்தார்.

"இன்சேக் டாரி மானா?"

"பினேங்"

" டாதாங் மாச்சாம் மானா..?"

"பஸ்"

"ஓகே, கெர்ஜா அபா"

"குரு ஸ்கோலா"

அந்த அதிகாரியின் முகத்தில் சற்று நேரம் ஈயாடவில்லை. அடுத்து இன்னும் மரியாதையாகப் பலக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே அனைத்தையும் வெள்ளைத் தாளில் குறித்துக் கொண்டார்.

அங்குமிங்கும் மண்டோர் வேலைப் புரிந்துக் கொண்டிருந்த அதே இந்திய காவல் துறை அதிகாரியை அழைத்தேன்.

"அண்ணே, கொஞ்ச நேரம் இங்க வாங்கண்ணே..."

" கொஞ்ச நேரம் இருங்க.."

எதோ வேளையில் மும்முரமாக இருந்தார், பின்பு என்னிடம் நெருங்கினார்..

"சொல்லுங்க..."

இல்லண்ணே, இப்ப இவங்க எங்களோட டீதேல்ஸ்லாம் எடுக்குறாங்களே, இதனால ஏதாச்சும் வேலைக்கு பாதிப்பு வருமா..?"

"அதுலாம் ஒன்னுமில..கவலவேணாம்.. சும்மா ஒரு ப்ரோசீடியருக்குதான் எழுதுறாங்க..ஓகே.." எனக் கூறிவிட்டு மற்ற வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார்.

விசாரணை முடிந்து எங்களை வெளியே அனுப்பினார்கள், நாங்கள் அனைவரும் சற்று நேரம் மண்டபத்தின் வெளியே காத்திருந்தோம். அடுத்த குழு உள்ளே விசாரிக்க அழைத்துச் செல்லப்பட்டனர். வெளியிலிருந்து உள்ளே என்ன நடக்கிறது என எட்டி எட்டி பார்த்துக் கொண்டிருந்தோம். சற்று நேரம் கழித்து விஜய் என்கிற இந்திய அதிகாரி மண்டபத்திலிருந்து வெளியெ வந்தார். எங்களைப் பார்த்து,

"சரிங்க, இங்க யாரும் நிக்க வேணாம், யாருலாம் உள்ளுக்கு போய்டிங்களோ தயவு செஞ்சி அந்த டெண்ட் கிட்ட போயி வேட் பண்ணுங்க.. இங்க இப்டி கூட்டமா நின்னா அப்புறம் உங்களுக்குதான் பிரச்சனை.. போங்க.."




எனக் கட்டளையிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் நாங்கள் யாரும் மசியவில்லை. அங்கேயே நின்றுக் கொண்டு மண்டபத்தினுள் என்ன நடக்கிறது என்றுப் பார்த்துக் கொண்டிருந்தோம். சற்று நேரம் கழித்து எங்கள் கூட்டத்திலொருவர்,

"ஏ, நம்ம பஸ்ச செக் பண்ராணுங்க... பேக்ல சட்டைலாம் இருக்கு...!!"

உடனே வேலன்,

"நான் ஃபேஸ் மாஸ்க், கையுறை எல்ல வெச்சிருக்கேனே"

அச்சமயம் எங்கள் பார்வை முழுதும் எங்கள் பேருந்து மீதே இருந்தது. பேருந்தினுள் இரு காவல் துறை அதிகாரிகள், எங்களுடைய பொருட்களை அலசி ஆராய்வது தெரிந்தது. சற்று நேரம் கழித்து பேருந்தினுள் இருந்த அனைவருடைய துணிப்பைகளையும் எடுத்துக் கொண்டு அதிகாரிகள் மண்டபத்தினுள் நுழைந்தனர்.

அப்பொழுது கூட்டத்திலிருந்த ஒருவர்,

" கேட்டா, அது நம்மலோட ஜாமனுங்க இல்லேனு சொல்லிருங்க..ஓகே.. ரெண்டு பஸ்ல வந்தோம்..ஜாமானுங்க மாறி மிக்ஸ் ஆயிபோச்சினு சொல்லிருங்க..."



போராட்டம் தொடரும்...

அத்தியாயம் ஆறு முற்றும்...

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

0 கருத்து ஓலை(கள்):

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP