ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோவில் கண்டுபிடிப்பு!

>> Thursday, July 24, 2008


ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலை, இந்தியத் தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா அன்னம்புத்தூர் கிராமத்தின் வடக்கில் ஏரியையொட்டி மண்மேட்டின் மீது சிவலிங்கம் ஒன்று நீண்ட நாட்களாக இருந்தது. கிராம மக்கள் இந்தியத் தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவிற்குத் தகவல் தெரிவித்தனர். கல்வெட்டு ஆய்வாளர் டாக்டர் ராஜவேலு தலைமையில் ரகு, அழகேசன் ஆகியோர் கொண்ட குழுவினர் அன்னம்புத்தூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

சிவலிங்கம் இருந்த மண்மேடு, பழமையான கோவிலின் சிதைந்தப் பகுதி என்பது தெரிய வந்தது. சிதைந்திருந்தக் கோவிலின் அதிட்டானத்தின் குமுத வரியில், தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த முதலாம் ராஜராஜ சோழனின் கல்வெட்டு இருந்ததைக் கண்டுபிடித்தனர். இந்த கல்வெட்டைப் படி எடுத்து ஆய்வு செய்ததில், முதலாம் ராஜராஜ சோழனின் 23வது ஆட்சி ஆண்டில் கல்வெட்டு செதுக்கியிருப்பதும், இதன் காலம் கி.பி., 1008 என்றும் தெரிய வந்தது.

முதலாம் ராஜராஜ சோழனின் மெய்கீர்த்தியுடன் துவங்கும் இந்தக் கல்வெட்டிலிருந்து, இங்குள்ள கோவில் மூலவரின் பெயர் திருநீதிஸ்வரர் என்பது தெரிய வந்துள்ளது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் கிடங்கில் நாட்டைச் சேர்ந்த அன்னம்புத்தூரில் உள்ள திருநீதிஸ்வரர் கோவிலுக்கு ஒரு நந்தா விளக்கு எரிப்பதற்காக முதலாம் ராஜராஜ சோழன் ஊருக்கு வடக்கே நிலம் கொடையாக வழங்கியதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் கோவிலை முதலாம் ராஜராஜ சோழன் காலத்திற்கு முன்பே பல்லவர்கள் காலத்தில் கட்டியிருப்பது, இதன் அடித்தளத்தில் உள்ள பெரிய அளவிலான செங்கற்களால் தெரிய வருகிறது. கோவிலின் அதிட்டானத்தில் குமுதவரி மற்றும் தலைப்பகுதியை மட்டும் கருங்கல்லால் கட்டியுள்ளனர். இதன் மேல் செங்கற்களைக் கொண்டு கோவிலின் சுவரை அமைத்துள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் ஆனதால் செங்கல் சுவர் இடிந்து மண்மேடாகி உள்ளது. இந்த மண் மேட்டின் மீதே திருநீதிஸ்வரர் திறந்த வெளியில் காட்சி தருகிறார். கோவிலின் அருகில் புடைப்புச் சிற்பமாக உள்ள வினாயகர் சிலை இந்தக் கோவில் பல்லவர் காலத்தைச் சேர்ந்தது என்பதற்கு, மேலும் ஆதாரமாக விளங்குகிறது.

இக்கோவிலின் மேற்கில் உள்ள செல்லியம்மன் கோவிலில் பல்லவர் காலத்தைச் சேர்ந்த ஏழு கன்னியர்களின் சிலைகள் காணப்படுகின்றன. கோவிலின் பழமை மற்றும் வரலாற்றை அறிந்து கொண்ட கிராம மக்கள் சிதைந்த நிலையிலுள்ள திருநீதிஸ்வரர் கோவிலை புனரமைக்க தெய்வநாயகம் என்பவர் தலைமையில் திருப்பணிக்குழுவை ஏற்படுத்தியுள்ளனர்.

ஆதார‌ம் : தின‌ம‌ல‌ர்

Facebook Blogger Plugin: Bloggerized by AllBlogTools.com Enhanced by MyBloggerTricks.com

1 கருத்து ஓலை(கள்):

Anonymous February 24, 2013 at 1:34 AM  

I am truly pleased to read this website
posts which carries lots of helpful data, thanks for providing these
kinds of statistics.

Blog Widget by LinkWithin
© 2007-2015 ஓலைச்சுவடி, மலேசியா - olaichuvadi@gmail.com

Blogger templates made by AllBlogTools.com

Back to TOP